Tuesday, 11 August 2009

கட்டிலில் கலையொன்று




தொட்டிலில் கிடந்த பிண்டமொன்று
கட்டிலில் கதறுது கைக்காசுக்கு

என் பூஜை அறை கலைத்தேவதை
பிண்டமென்றேன் உன்னை

உடல் மட்டுமே விலை போகிறது
ஆன்மா தூய்மைபடுகிறது
புறக்கண் கொண்டு
உடல் தீண்டப்போவதில்லை
உன் அகம் தீண்டி
புறம் தள்ளி புனிதம் காணவே
பிண்டமென்றேன் உன்னை

அந்தப்பிரசவம்
வாடகைமுக தரிசிப்பில்
கலைமகள் என்ற உலகம்
இந்தப்பிரசவத்தில்
மெய்யுடல் காணாது
விலைமகள் என்கிறது

மஞ்சள் நீராட்டில் நனை உடல்
பூப்பெய்தி தொட்ட நாணம்
சடங்குகளில் வளர்த்த கட்டுப்பாடு
அத்தனையும் விலைபோகிறது
அந்த முதல் சந்தையில்
இருந்தும் உன் கற்பு மட்டும்
போலிப்புன்னகையில் புதுமையடைகிறது

தினம் தினம் எச்சில்கள்
தேநீர் கோப்பைகள் எழுதுகிறது
உடையும் வரை தேயப்போவது
உவமைகள் அற்ற உடல்களே
உன் உடலுக்கு உவமை தரப்போவதில்லை
உனக்கென்ற நாமம் உடலுக்கில்லை
நீ துய்மையானவள் புனிதப்பட்டவள்

எரிகின்ற மேடையில் தூக்கிப்போட்டும்
தீயில் தினம் வதைத்தெடுத்தும்
சாம்பலாகும் முடிவுமட்டும் உனக்கில்லாமல்
விலைபேசி எரிகிறது உன்னுடல்
மரணித்தும் வாழவைத்து
இறந்தும் உயிர்த்து
இறை விஞ்சி உயிர் சுமக்கிறது உன் உடல்

வருகிறார்கள் ரிஷிகள்
பிரம்மரிஷி ஆசைகளோடு?
முன்னே வருவது முற்றும் துறந்தவர்
கையில் எதற்கு வெண்கலப் பாத்திரம்
பின்னோடு யார் கவிஞனா?
கனவுகளோடு வாழ்பவன் நீ தானோ?

கட்டிலோடு ஆசை காமனோடு கரைகிறதே
ஆசையழித்த நீ பிரம்மரிஷி
கற்பும் ஆன்மாவும் உனக்கென கொண்டு
முற்றும் துறந்த நீ முனி
மெய்யழித்து நிஜம் புதைத்து
கனவோடு வாழ்வதால் நீ கவிஞன்

காணவில்லை மறையவில்லை
இருட்டோடு நிர்வாணம்
கருப்பில் தன்மானம்
கட்டிலில் கிடப்பது தவம்
இறந்த உடலை நுகர்கிறது
ஆயிரம் புழுக்கள்
கட்டியணைப்பது உயர்தினையல்ல
நித்தம் அறுவடைசெய்த அஃறிணை

இதயம் மட்டும் அழுகிறதே
உன் ஒவ்வொரு புன்னகையிலும்

நீ போதனைகளுக்காக பிறந்தவள்
புத்தன் வழியில் புனிதம் பெற்றவள்
ஜேசுவோடு பாவம் சுமப்பவள்
பிற மகிழ்ச்சியில் உயிரிழந்தவள்
இறைவனுக்கு ஏது இதயம்?

வார்த்தைகள் சுடும் உன்னை
வாழ்க்கை உனக்கேது

நீ வாழும்போதே ஆன்மாவனவள்
வளரும்போது உடல் கொன்றவள்
தொடுதலில் உன்னை அழித்தவள்
தீண்டலில் தற்கொலை செய்தவள்

வாடகை உடல் உனக்கெதற்கு
சரீர கடன் உலகிலேயே தீர்த்தவள்

நீ நீயாகிறாய்
தினம் கொட்டிவிட்ட உன் உணர்வழித்து
நாளோடு உடல் தின்று
பிரபஞ்சம் அடங்காத பிரபஞ்சம்
உனக்குள் வைத்து
மனிதம் மரணித்து.....

No comments:

Post a Comment