Saturday, 5 September 2009

புத்தனும் பித்தனும்



புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

நித்தமொரு பிண்டமென்று
ரத்தஆறு ஓடுதே

காட்டிலொரு யானையொண்டு
மதம் பிடிக்கப்பார்த்ததே

குட்டியந்த யானையென்று
பால் கொடுத்து சென்றதே

நாட்டில் நல்ல மனிதம் காண
மதம் என்று சொல்லுதே

நல்ல புத்தம்அது நிலை கொள்ள
இனமொன்று கொல்லுதே

விதி சொல்லி பிள்ளையொன்று
பிணமென்று ஆனதே

வரும் நதி போன்ற கூட்டமொன்று
தாய்மண் இழக்குதே

மனிதம் வளர்ப்பார்
நெஞ்சில் மதமும் வளர்ப்பார்
பிஞ்சில் சொல்ல மறுப்பார்
இனம் சொல்லி மரிப்பார்

புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

இனமொன்று மரணமென்று
முடிவொன்று சொன்னதே

நாட்டிலொரு படையொன்று
பிக்கு வாக சென்றதே

வாக்கு இன்றி தேர்தலின்றி
நாடுஆள பாக்குதே

பூனையொன்று சாது என்று
காவி ஆடை கட்டுதே

அதிலொன்று எலியென்று
உயிர் கொள்ளபபக்குதே

முற்றுமது துறந்ததென்று
காவியது காட்டுதே

இனம்கொன்று வாழ்ந்துபார்க்க
சாவியது கொடுக்குதே

நீர் கேட்டு மா நிலமொன்று
கையேந்தி நிக்குதே

நிலம் பிரிக்கும் அதுசொந்தமென்று
இன்னும் கூட்டம் நம்புதே

போதனை செய்வார்
நல்ல அறிவும் சொல்வார்
யாதும் தேசம் என்பார்
புத்தம் கொலையும் செய்வார்

புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

பிஞ்சுப்பிள்ளை கையில்அது
தாயின் ரத்தம் பூசுதே

வீட்டிலொரு சொந்தமொன்று
போராடி கேக்குதே

மனிதனில்லை நீயென்று
போதிமரம் சொல்லுதே

பறவையொன்று கூடுகட்டி
குஞ்சுஒன்று பொரிக்குதே

குருவியொன்று இடம்தேடி
கூட்டைஅது கலைக்குதே

பாவம் அந்த பறவையென்று
ஐயிந்தறிவு சொல்லுதே

மீதியது கலைக்குமுன்னே
இறக்கை கட்டி பறக்குதே

பக்கம் வந்த பித்தனொன்று
காரணம் கேட்டதே

உயிர்கொண்டு மண்திருட
நான் புத்தனில்லை என்றதே

புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

இனம்மொன்று வேலியிட்டு
சிறைஎன்று போனதே

நாளை என்ன என்று சொல்ல
மதம் என்ன செய்யுமோ

புத்தம் சரணம்... புத்தம் சரணம்.....

மதம் பிடித்த மனிதன் கொல்ல
புத்தன் ஒருத்தன் பிறப்பானோ

கையிலொரு தீயேந்தி
தன்மதம் அழிப்பானோ.......